Sunday, July 20, 2008

தோசைத்திருவிழா



நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், எங்கள் வீட்டில் வாரந்தோறும் தோசைத்திருவிழா நடக்கும். அதாவது வாரம் இருமுறை எங்கள் வீட்டில், இரவுக்கு, அம்மா தோசை சுடுவார்கள், பெரும்பாலும் வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில்.

வெள்ளிக்கிழமை காலையில் அரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் ஊறப்போடுவார்கள். அப்போதிருந்தே அந்த நாள் சிறப்பானதாக ஆகிவிடும். சனி, ஞாயிறு விடுமுறை என்பதே வெள்ளிக்கிழமைக்கு உற்சாகத்தைக் கொடுத்து விடும் , தவிர அன்றைக்கு இரவு தோசை. காலையில் இருந்தே, மனம் எப்போது மாலை ஆகும் என்று காத்துக்கொண்டிருக்கும். பள்ளி விட்டு வீட்டுக்குவரும்போது, அம்மா கிரைண்டரில் மாவரைத்துக்கொண்டிருப்பார்கள். அதற்கு தண்ணீர் அளவாக விடும்வேலையை நானும், என் தம்பியும் ஆசையாக செய்வோம். ஒரு டம்ளர் நீரை எடுத்துக்கொண்டு, “அம்மா, இது போதுமா.. இன்னும் கொஞ்சம் ஊற்றவா?” என்று கேட்டுக்கேட்டு ஊற்றுவோம்.

எங்கள் வீட்டில் மாவரைத்த அன்றைக்கே தோசை சுடுவோம். வேறெங்கும் இப்படி நான் பார்த்ததில்லை. மாவு புளிப்பதற்கு ஓர் இரவு விட்டு மறுநாளே எல்லாரும் தோசை சுடுவார்கள். எங்கள் வீட்டில் மாவரைத்த அன்றே தோசை. அந்த சுவை நன்றாக இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி. ஒருபாத்திரம் நிறைய அரைப்பார்கள். யார் முதலில் தோசை சாப்பிட உட்காருவது என்று பெரிய போட்டாபோட்டி நடக்கும், நான், என் தம்பி, அப்பா மூன்று பேருக்கும்இடையில். “போனவாரம் நீ முதல்ல சாப்பிட்டே.. அதனால் இந்த வாரம் நான்அப்படின்னு முறை வைத்துக்கொண்டு முதலில் சாப்பிட உட்காருவோம். இரவுஏழு மணிக்கு ஆரம்பிப்பார்கள், அம்மா,தோசை சுட.

நானும் பல இடங்களில் தோசை சாப்பிட்டு இருக்கிறேன், இருந்தும் என் அம்மா சுடும் தோசை மாதிரி, மெல்லிசாக, பொன்னிறத்தில், மொறுமொறுவென்று தோசை எங்கும் சாப்பிட்டதில்லை. எல்லாருக்கும் அவர்கள் அம்மா செய்யும்உணவு பிடிக்கும் என்பதால் சொல்லவில்லை. என் பாட்டி, அத்தை, தீபா அக்காவின் அம்மா, இவர்கள் செய்யும் தோசை நன்றாக இருக்கும். ஆனால் அம்மா சுடுவது போல் செய்ய வராது அவர்களுக்கு.

மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் தோசைக்கல் வைத்து அம்மா, சமையலறையில் கீழே உட்கார்ந்து கொள்வார்கள். அந்த ஸ்டவ்வின் சூடால் அம்மாவுக்கு வியர்வைத்துளியால் முகம் மினுமினுக்கும் (glossy). புடவைத்தலைப்பால் துடைத்துகொண்டே தோசை ஊற்றுவார்கள்.

பக்கத்தில் சமையலறை நிலவின் குறுக்கே கால் நீட்டி உட்கார்ந்து கொள்வேன் ( அது இரண்டறை அடி அகலம் இருக்கும். எனக்கு அப்போது அது சரியாக இருக்கும்கால் நீட்டிக்கொள்ள.) தோசை ஒவ்வொன்றாக வரவர உள்ளே போய்க்கொண்டே இருக்கும். (எவ்வளவு சாப்பிடுவேன் என்று சொல்லமாட்டேன். தோசை சாப்பிடும்போது கணக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள்.) சட்டினியும் காலியாகிக்கொண்டே இருக்கும். இதில் நான் தேங்காய் சட்டினியை விரும்பி சாப்பிடுவேன். எப்படி என்றால்,சட்டினியை மட்டுமே குடிப்பேன். நான் பலவிடயங்களில் சுயநலம் மிக்கவன், அதில் இது முதன்மையானது. “டேய்.. அளவா சாப்பிடு சட்டினியை.. தம்பிக்கும், அப்பாவுக்கும் வேணும் இல்ல.” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அம்மா.

நானே பாதிக்கும்மேல் காலி செய்து விடுவேன், பிறகு தம்பி, அப்புறம் அப்பாவுக்குகொஞ்சம். கடைசியில் சாப்பிடும் அம்மாவுக்கு பெரும்பாலும் ஒன்றும் மீதமிருக்காது. ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் இந்த வைபவம், அப்பா சாப்பிட்டுமுடிக்கும்போது மணி ஒன்பது ஆகி இருக்கும். அம்மா களைத்துபோயிருப்பார்கள் இந்த நேரத்தில். எனக்குத் தெரிந்து.. அம்மாவுக்கு - அப்பாவோ, நானோ, தம்பியோ தோசை சுட்டுப்போட்டதில்லை. எல்லாருக்கும் மெல்லிசாக, ஒவ்வொன்றாக சுட்டுப்போட்டவர்கள், தனக்கு, தடிமனாக 4-5 தோசையை மொத்தமாக சுட்டுக்கொண்டு, பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சட்டினியை வழித்து எடுத்துக்கொண்டு, பிறகு சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

இந்த திருவிழா சனிக்கிழமையும் தொடரும். காலையில் இட்டளி, இரவு தோசை. மாவு மீதம் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை இரவும் தோசை. தொட்டுக்கொள்ள, மதியம் செய்த கறிக்குழம்பு. இத்தோடு தோசைத்திருவிழா இனிதே அந்த வாரம் நிறைவுபெறும் . மீண்டும் அடுத்த வாரம், மீண்டும் தோசை. மீண்டும்..மீண்டும்.

2 comments:

Jayakumar said...

தோசை சாப்பிடுவதைப் பற்றிகூட இப்படி ஒரு அட்டகாசமான பதிவெழுதலாமா....

எனக்கு இப்பவே ஊருக்குப்போய் எங்கள் வீட்டில் தோசை சாப்பிட வேண்டும் போல இருக்கு...

// எனக்குத் தெரிந்து.. அம்மாவுக்கு - அப்பாவோ, நானோ, தம்பியோ தோசை சுட்டுப்போட்டதில்லை. எல்லாருக்கும் மெல்லிசாக, ஒவ்வொன்றாக சுட்டுப்போட்டவர்கள், தனக்கு, தடிமனாக 4-5 தோசையை மொத்தமாக சுட்டுக்கொண்டு, பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சட்டினியை வழித்து எடுத்துக்கொண்டு,//

எங்க வீட்டிலும் இதே கதைதான்

Jayakumar said...

அடையாளம் கவிதை என்ன ஆச்சு?