Sunday, July 20, 2008

தோசைத்திருவிழா



நான் பள்ளியில் படிக்கும் காலங்களில், எங்கள் வீட்டில் வாரந்தோறும் தோசைத்திருவிழா நடக்கும். அதாவது வாரம் இருமுறை எங்கள் வீட்டில், இரவுக்கு, அம்மா தோசை சுடுவார்கள், பெரும்பாலும் வெள்ளி, சனிக்கிழமை இரவுகளில்.

வெள்ளிக்கிழமை காலையில் அரிசியையும், உளுந்தையும் தண்ணீரில் ஊறப்போடுவார்கள். அப்போதிருந்தே அந்த நாள் சிறப்பானதாக ஆகிவிடும். சனி, ஞாயிறு விடுமுறை என்பதே வெள்ளிக்கிழமைக்கு உற்சாகத்தைக் கொடுத்து விடும் , தவிர அன்றைக்கு இரவு தோசை. காலையில் இருந்தே, மனம் எப்போது மாலை ஆகும் என்று காத்துக்கொண்டிருக்கும். பள்ளி விட்டு வீட்டுக்குவரும்போது, அம்மா கிரைண்டரில் மாவரைத்துக்கொண்டிருப்பார்கள். அதற்கு தண்ணீர் அளவாக விடும்வேலையை நானும், என் தம்பியும் ஆசையாக செய்வோம். ஒரு டம்ளர் நீரை எடுத்துக்கொண்டு, “அம்மா, இது போதுமா.. இன்னும் கொஞ்சம் ஊற்றவா?” என்று கேட்டுக்கேட்டு ஊற்றுவோம்.

எங்கள் வீட்டில் மாவரைத்த அன்றைக்கே தோசை சுடுவோம். வேறெங்கும் இப்படி நான் பார்த்ததில்லை. மாவு புளிப்பதற்கு ஓர் இரவு விட்டு மறுநாளே எல்லாரும் தோசை சுடுவார்கள். எங்கள் வீட்டில் மாவரைத்த அன்றே தோசை. அந்த சுவை நன்றாக இருக்கும். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்டினி. ஒருபாத்திரம் நிறைய அரைப்பார்கள். யார் முதலில் தோசை சாப்பிட உட்காருவது என்று பெரிய போட்டாபோட்டி நடக்கும், நான், என் தம்பி, அப்பா மூன்று பேருக்கும்இடையில். “போனவாரம் நீ முதல்ல சாப்பிட்டே.. அதனால் இந்த வாரம் நான்அப்படின்னு முறை வைத்துக்கொண்டு முதலில் சாப்பிட உட்காருவோம். இரவுஏழு மணிக்கு ஆரம்பிப்பார்கள், அம்மா,தோசை சுட.

நானும் பல இடங்களில் தோசை சாப்பிட்டு இருக்கிறேன், இருந்தும் என் அம்மா சுடும் தோசை மாதிரி, மெல்லிசாக, பொன்னிறத்தில், மொறுமொறுவென்று தோசை எங்கும் சாப்பிட்டதில்லை. எல்லாருக்கும் அவர்கள் அம்மா செய்யும்உணவு பிடிக்கும் என்பதால் சொல்லவில்லை. என் பாட்டி, அத்தை, தீபா அக்காவின் அம்மா, இவர்கள் செய்யும் தோசை நன்றாக இருக்கும். ஆனால் அம்மா சுடுவது போல் செய்ய வராது அவர்களுக்கு.

மண்ணெண்ணெய் ஸ்டவ்வில் தோசைக்கல் வைத்து அம்மா, சமையலறையில் கீழே உட்கார்ந்து கொள்வார்கள். அந்த ஸ்டவ்வின் சூடால் அம்மாவுக்கு வியர்வைத்துளியால் முகம் மினுமினுக்கும் (glossy). புடவைத்தலைப்பால் துடைத்துகொண்டே தோசை ஊற்றுவார்கள்.

பக்கத்தில் சமையலறை நிலவின் குறுக்கே கால் நீட்டி உட்கார்ந்து கொள்வேன் ( அது இரண்டறை அடி அகலம் இருக்கும். எனக்கு அப்போது அது சரியாக இருக்கும்கால் நீட்டிக்கொள்ள.) தோசை ஒவ்வொன்றாக வரவர உள்ளே போய்க்கொண்டே இருக்கும். (எவ்வளவு சாப்பிடுவேன் என்று சொல்லமாட்டேன். தோசை சாப்பிடும்போது கணக்கு வைத்துக்கொள்ளக்கூடாது என்பார்கள்.) சட்டினியும் காலியாகிக்கொண்டே இருக்கும். இதில் நான் தேங்காய் சட்டினியை விரும்பி சாப்பிடுவேன். எப்படி என்றால்,சட்டினியை மட்டுமே குடிப்பேன். நான் பலவிடயங்களில் சுயநலம் மிக்கவன், அதில் இது முதன்மையானது. “டேய்.. அளவா சாப்பிடு சட்டினியை.. தம்பிக்கும், அப்பாவுக்கும் வேணும் இல்ல.” என்று சொல்லிக்கொண்டே இருப்பார்கள் அம்மா.

நானே பாதிக்கும்மேல் காலி செய்து விடுவேன், பிறகு தம்பி, அப்புறம் அப்பாவுக்குகொஞ்சம். கடைசியில் சாப்பிடும் அம்மாவுக்கு பெரும்பாலும் ஒன்றும் மீதமிருக்காது. ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் இந்த வைபவம், அப்பா சாப்பிட்டுமுடிக்கும்போது மணி ஒன்பது ஆகி இருக்கும். அம்மா களைத்துபோயிருப்பார்கள் இந்த நேரத்தில். எனக்குத் தெரிந்து.. அம்மாவுக்கு - அப்பாவோ, நானோ, தம்பியோ தோசை சுட்டுப்போட்டதில்லை. எல்லாருக்கும் மெல்லிசாக, ஒவ்வொன்றாக சுட்டுப்போட்டவர்கள், தனக்கு, தடிமனாக 4-5 தோசையை மொத்தமாக சுட்டுக்கொண்டு, பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் சட்டினியை வழித்து எடுத்துக்கொண்டு, பிறகு சர்க்கரையைத் தொட்டுக்கொண்டு சாப்பிடுவார்கள்.

இந்த திருவிழா சனிக்கிழமையும் தொடரும். காலையில் இட்டளி, இரவு தோசை. மாவு மீதம் இருந்தால் ஞாயிற்றுக்கிழமை இரவும் தோசை. தொட்டுக்கொள்ள, மதியம் செய்த கறிக்குழம்பு. இத்தோடு தோசைத்திருவிழா இனிதே அந்த வாரம் நிறைவுபெறும் . மீண்டும் அடுத்த வாரம், மீண்டும் தோசை. மீண்டும்..மீண்டும்.

Sunday, July 13, 2008

உரைநடை

நடந்து வந்தாள்
கையில் பூவை சுழற்றியபடி
சுழன்றது என் மனதும்.

போதி மரத்தடியில்
புத்தனுக்கு ஞானம் வளர்ந்ததாம்.
இருந்து விட்டுப்போகட்டும்.
எனக்கு தெரிந்ததெல்லாம்
விழுது பரப்பிய ஓர் ஆலமரத்தடியில்
எங்கள் காதல் வளர்ந்தது.

நாம் பேசுவது வீட்டுக்கு தெரிந்தால்..
அவளுக்கு கை நடுங்கியது.
ஆண்பிள்ளையல்லவா நான்.
கை நடுங்கவில்லை எனக்கு,
மனம் நடுங்கியது.


Monday, June 30, 2008

நிலா பார்த்தல்...

பேருந்துப் பயணம். கல்லூரியில் படிக்கும் நாட்களில், விடுமுறைக்கு ஊருக்குப் போவது பலமுறை பேருந்தில். பெரும்பாலும் நீண்ட பயணங்கள் இரவிலேயே இருக்கும். எனக்கு பேருந்தை விட ரயில் பயணம் பிடிக்கும் என்றாலும்.. பேருந்துக்கு.. அதற்கே உரிய சாதகங்கள் பல. ஜன்னலைத் திறந்தால் விசுவிசுவென்று அடிக்கும் குளிர்காற்று, பேருந்துக்கே உரியது. சாலையில் சீராகப்போகும் பேருந்தின் சத்தம் ஒருவித ரொமாண்டிக்கான மனநிலையத் தரும். மனம் லேசாகி, தனக்குப் பிடித்தவர்களை நினைத்துக் கொள்ளும். ரயிலில் போனால், வீட்டுக்குள் இருப்பது போன்றே ஓர் உணர்வைத் தரும். ஆனால், பேருந்து அப்படியல்ல. நமக்கு முன்னே போகும் சாலையும், ஓட்டுனர் இன்னொரு பஸ்ஸை முந்த ஒடித்து ஓட்டும் லாவகமும், உட்கார்ந்து இருக்கும் நாற்காலியின் அதிர்வும் ...பேருந்து.. பயணம்.

பஸ்சில் போகும்போது இருகைகளாலும் காதைப் பொத்திக்கொண்டு, கைகளைத் திறந்து திறந்து மூடினால், “வாவ்வாவ்வாவ்” என்று சத்தம் கேட்கும். அது எனக்கு, “ அவ்வா அவ்வா அவ்வா” என்று கேட்கும். தெலுங்கில் அவ்வா என்றால் பாட்டி. எனக்கு என் பாட்டியை மிகவும் பிடிக்கும் என்பதால், சிறுவயதில் பேருந்தில் போகும்போதெல்லாம் அப்படி செய்துகொண்டே போவேன். இப்போதும்.

பேருந்தின் ஓட்டத்தில், வாழ்க்கையும் ஓடுவதாகத் தோன்றும். ஓடும் பேருந்தின் ஜன்னலில் நிலா... ஓடாமல் நிற்கும். முகத்தில் அடிக்கும் காற்றும், நிலாவும் சேர்ந்து எவ்வளவோ கற்பனைகளைத் தோற்றுவிக்கும். எனக்கான காதலி ஒருத்தி வந்து அமர்வாள், மிகவும் அருகில். பாரதிதாசனின், “ நீ எனக்கு அமிழ்து, நானுனக்கு எப்படியோ” என்று சொல்லிக்கொண்டிருப்பேன் அவளிடம். “ போடா, உனக்கு வேறு வேலை இல்லை” என்பாள் என் காதலி. காற்றில் அவளின் தலைமுடி என்மேல் பறந்து கொண்டிருக்கும். பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தென்னை மரங்களின் கீற்றுகள் மறைத்தாலும், அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து சிரிக்கும்... நிலா.

Sunday, June 29, 2008

நிலா பார்த்தல்...

சிறு வயதில் தினமும் நிலாவை பற்றி எதேனும் ஒன்று நினைத்துக் கொண்டிருந்து இருக்கிறேன். வளர்பிறைக் காலத்தில் வரும் எல்லாப் பிறைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும், இரண்டாம் பிறை, மூன்று, நான்காம் பிறைகள் மிகவும் அழகு. இதில் எங்கள் ஊரில் நான்காம் பிறையை பார்க்கக்கூடாது என்று சொல்லுவார்கள், “நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாதபாடு” என்று பயமுறுத்துவார்கள். நான் வெகுதடவை, அந்த நாளில் நிலாவை பார்த்து விடக்கூடாது என்று பிரயத்தனம் செய்து இருக்கிறேன். முகத்தையே நிலா பக்கம் திருப்ப மாட்டேன், மீறியும் கண்கள் அந்தப்பக்கம் போகும். ஓரக்கண்ணால் கூட பார்க்கக்கூடாதென்று இறுக்கி மூடிக்கொள்வேன். சிலநாட்கள் எல்லாவற்றையும் மீறி கண்ணில் பட்டுவிடும் அந்த நான்காம் பிறை. பிறகு,பயந்துப போய் கிடப்பேன் என்ன ஆகுமோ என்று. என்னதான் ஆகும் பார்ப்போம் என்று தைரியமாகப் பார்த்தேன் சில மாதங்கள். அந்த அழகான நான்காம் பிறை, பின்பு எல்லா மாதங்களும் திரும்பிப் பார்க்கவைத்தது.

நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்ததில் இருந்து, பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் வரை, ஒரு வீட்டில் இருந்தோம். ரோட்டின் மேலேயே வீடு. ரோடு என்றால் பெரியது இல்லை. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டவுன்பஸ் போகும், அப்புறம், சைக்கிள்களும், மாட்டு வாண்டியும் போகும் ரோடு. ஒரு சிறிய வாசல், இரண்டு பக்கமும் திண்ணைகள், ஒரு பெரிய அறை அப்புறம் சின்ன சமையலறையால் ஆனது எங்கள் வீடு. மற்ற வீடுகளைப் போலல்லாமல் கூரை, ஓட்டுக்கூரை, மிகவும் உயரமானது. கவிழ்த்துப்போட்ட முக்கோணம் போல. அதன் குத்துயரம் ௨0 அடிக்கு வரும். கூரையின் இரு பக்கங்களிலும் இரண்டு கண்ணாடி ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும், வெளிச்சம் வர. என் அப்பா, நான், தம்பி, அம்மா என்று வரிசையாகப் படுத்துக்கொள்வோம் அந்த அறையில்( வரவேற்பறை, படிக்கும் அறை, சாப்பிடும், தூங்கும் அறை எல்லாமும் அதுதான்). மேலெ அழகான ஒரு ராலிஃபேன் சுற்றிக்கொண்டிருக்கும். போர்வையை கழுத்து வரை இறுக்கப் போர்த்திக்கொண்டு நிலாவுக்காக காத்திருப்பேன். இரவில், வானத்தைச் சுற்றி வட்டமடிக்கும் நிலா கண்ணாடி ஓட்டின் வழியாக எங்கள் வீட்டில், நான்கு சதுரங்களில் தன் வெளிச்சத்தை தவழவிட்டு இருக்கும். நேரம் ஆக வெளிச்சம் நகர்ந்து கொண்டே வரும். சரியாக என் முகத்துக்கு நேரே வெளிச்சம் வரும்போது.. ஆகா.. கண்ணாடி ஓட்டில் நிலா.. அதுவும் முழுநிலாக்காலங்களில்.. அப்படியே பார்த்துக்கொண்டு படுத்திருப்பேன். அது மெல்ல நகர்ந்து அப்பா, தம்பி, அம்மாக்கும் காட்சியளித்து விட்டு தன் உலாவைத் தொடரும். தெருவில் முழு அலங்காரத்துடன் உலாவரும் உற்சவமூர்த்தி நம் வீட்டுமுன்பும் சிறிது நின்று வீட்டுப்பெண்களுக்கு காட்சியளித்துவிட்டு தன் பயணத்தைத் தொடருவதுபோல.. இந்த நிலாவும்... என்று சொல்லத் தோன்றுகிறது.

Sunday, June 22, 2008

நிலா பார்த்தல்

நிலா. சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என் வாழ்வில் கூடவே பயணிக்கிறது நிலாவும். பள்ளியில் படிக்கும் வயதில் வெகுநேரம் நிலாவையே பார்த்துக்கொண்டிருப்பேன். அதன் வெண்மை நிறமும் தண்ணென்ற வெளிச்சமும் மிகுந்த ஆனந்தத்தை தரும். மனதில் நிறைய கற்பனைகள் தோன்றும்.நிலா நான் செய்யும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது , நான் செய்யும் எல்லா தவறும் அதற்குத் தெரியும் என்றும் நினைத்துக் கொள்வேன். என் மனதில் நினைப்பது எல்லாமும் நிலாவுக்குத் தெரியும் என்று பயந்து கொண்டு நல்லது மட்டுமே நினைக்க வேண்டும் என்று சொல்லிக்கொள்வேன்.

எங்கள் கிராமத்தில், மாலை ஆறு மணிக்கெல்லாம், என் அம்மா, பக்கத்து , எதிர் வீட்டு அக்காக்கள் எல்லாம் வீட்டுத்திண்ணைகு வந்து விடுவார்கள், அரட்டை அடிக்க. அப்போது தொலைக்காட்சி எங்கள் ஊரில் வந்திருக்கவில்லை. சிறு பையன்கள் எல்லாம் வாசலில் கோலிக்குண்டு விளையாடுவோம். இன்னும் இருட்டாமல் வானம் நீலநிறமாக இருக்கும். அப்போதே நிலாப்பிறை முளைத்து இருக்கும். விளையாட்டு உற்சாகமாகப் போகும். வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து ஏழு மணிக்கெல்லாம் வானம் கருப்பாகி நிலா பளீரென்று தெரியும். அந்த வெளிச்சத்தில் கோலிக்குண்டு எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பது கடினமாகப் போய்விடும். அப்போதும் விளையாட்டை விட மனது வராமல் விளையாடிக் கொண்டிருப்போம். கொஞ்ச நேரத்தில் நான்கைந்து குண்டுகள் தொலைந்து போகும் இருட்டில். போதும் என்று அதை விட்டு விட்டு, அம்மாக்கள், அக்காக்கள், பேசுவதைக் கேட்பேன், ஒன்றும் புரியாது. எதற்கு இப்படி பேசுகிறார்கள், என்று என் அம்மாவை, “போதும்மா, எனக்கு பசிக்குது, வா போகலாம்” என்று கூப்பிடுவேன். அவர்களுக்கு வரவே மனசிருக்காது, “ இருடா, இன்னும் கொஞ்ச நேரம்” என்று பிடித்து அமர்த்துவார்கள். பின்பு என் நச்சரிப்பு தாளாமல் வந்து விடுவார்கள். எப்போதுமே என் அம்மாதான் முதலில் வந்து இருக்கிறார்கள், பின்பும் கூட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்பது மணி வரை.

பி.கு: நிலா பார்த்தல் - இந்த அழகான சொல், கவிஞர் வண்ணதாசனின்(கல்யாண்ஜி) கவிதைத்தொகுப்பின் தலைப்பு. அவருக்கு நன்றி.