Sunday, June 22, 2008

நிலா பார்த்தல்

நிலா. சிறு வயதிலிருந்தே எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என் வாழ்வில் கூடவே பயணிக்கிறது நிலாவும். பள்ளியில் படிக்கும் வயதில் வெகுநேரம் நிலாவையே பார்த்துக்கொண்டிருப்பேன். அதன் வெண்மை நிறமும் தண்ணென்ற வெளிச்சமும் மிகுந்த ஆனந்தத்தை தரும். மனதில் நிறைய கற்பனைகள் தோன்றும்.நிலா நான் செய்யும் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறது , நான் செய்யும் எல்லா தவறும் அதற்குத் தெரியும் என்றும் நினைத்துக் கொள்வேன். என் மனதில் நினைப்பது எல்லாமும் நிலாவுக்குத் தெரியும் என்று பயந்து கொண்டு நல்லது மட்டுமே நினைக்க வேண்டும் என்று சொல்லிக்கொள்வேன்.

எங்கள் கிராமத்தில், மாலை ஆறு மணிக்கெல்லாம், என் அம்மா, பக்கத்து , எதிர் வீட்டு அக்காக்கள் எல்லாம் வீட்டுத்திண்ணைகு வந்து விடுவார்கள், அரட்டை அடிக்க. அப்போது தொலைக்காட்சி எங்கள் ஊரில் வந்திருக்கவில்லை. சிறு பையன்கள் எல்லாம் வாசலில் கோலிக்குண்டு விளையாடுவோம். இன்னும் இருட்டாமல் வானம் நீலநிறமாக இருக்கும். அப்போதே நிலாப்பிறை முளைத்து இருக்கும். விளையாட்டு உற்சாகமாகப் போகும். வெளிச்சம் குறைந்து கொண்டே வந்து ஏழு மணிக்கெல்லாம் வானம் கருப்பாகி நிலா பளீரென்று தெரியும். அந்த வெளிச்சத்தில் கோலிக்குண்டு எங்கிருக்கிறது என்று கண்டு பிடிப்பது கடினமாகப் போய்விடும். அப்போதும் விளையாட்டை விட மனது வராமல் விளையாடிக் கொண்டிருப்போம். கொஞ்ச நேரத்தில் நான்கைந்து குண்டுகள் தொலைந்து போகும் இருட்டில். போதும் என்று அதை விட்டு விட்டு, அம்மாக்கள், அக்காக்கள், பேசுவதைக் கேட்பேன், ஒன்றும் புரியாது. எதற்கு இப்படி பேசுகிறார்கள், என்று என் அம்மாவை, “போதும்மா, எனக்கு பசிக்குது, வா போகலாம்” என்று கூப்பிடுவேன். அவர்களுக்கு வரவே மனசிருக்காது, “ இருடா, இன்னும் கொஞ்ச நேரம்” என்று பிடித்து அமர்த்துவார்கள். பின்பு என் நச்சரிப்பு தாளாமல் வந்து விடுவார்கள். எப்போதுமே என் அம்மாதான் முதலில் வந்து இருக்கிறார்கள், பின்பும் கூட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் ஒன்பது மணி வரை.

பி.கு: நிலா பார்த்தல் - இந்த அழகான சொல், கவிஞர் வண்ணதாசனின்(கல்யாண்ஜி) கவிதைத்தொகுப்பின் தலைப்பு. அவருக்கு நன்றி.

1 comment:

Jayakumar said...

அமுதா செழியன், வலைப்பூ உலகிற்கு உன்னை(உங்களை?) வரவேற்கிறேன். கடைசியாக இப்பொழுதாவது வலைப்பதிவு துவங்கத் தோன்றியதே...ரொம்ப நல்லது.

பதிவு மிக அருமை. //என் வாழ்வில் கூடவே பயணிக்கிறது நிலாவும்// எவ்வளவு உண்மை.

பதிவின் முகவரியும் தலைப்பும் மிக romantic ஆக இருக்கிறது. மிக்க நன்று. :-)

என்னைப்போல சோம்பேறியாக இல்லாமல் தொடர்ந்து பதிவிட வேண்டுமென்று ஆணையிடுகிறேன்.