Sunday, June 29, 2008

நிலா பார்த்தல்...

சிறு வயதில் தினமும் நிலாவை பற்றி எதேனும் ஒன்று நினைத்துக் கொண்டிருந்து இருக்கிறேன். வளர்பிறைக் காலத்தில் வரும் எல்லாப் பிறைகளும் எனக்கு மிகவும் பிடிக்கும், இரண்டாம் பிறை, மூன்று, நான்காம் பிறைகள் மிகவும் அழகு. இதில் எங்கள் ஊரில் நான்காம் பிறையை பார்க்கக்கூடாது என்று சொல்லுவார்கள், “நான்காம் பிறையைப் பார்த்தால் நாய் படாதபாடு” என்று பயமுறுத்துவார்கள். நான் வெகுதடவை, அந்த நாளில் நிலாவை பார்த்து விடக்கூடாது என்று பிரயத்தனம் செய்து இருக்கிறேன். முகத்தையே நிலா பக்கம் திருப்ப மாட்டேன், மீறியும் கண்கள் அந்தப்பக்கம் போகும். ஓரக்கண்ணால் கூட பார்க்கக்கூடாதென்று இறுக்கி மூடிக்கொள்வேன். சிலநாட்கள் எல்லாவற்றையும் மீறி கண்ணில் பட்டுவிடும் அந்த நான்காம் பிறை. பிறகு,பயந்துப போய் கிடப்பேன் என்ன ஆகுமோ என்று. என்னதான் ஆகும் பார்ப்போம் என்று தைரியமாகப் பார்த்தேன் சில மாதங்கள். அந்த அழகான நான்காம் பிறை, பின்பு எல்லா மாதங்களும் திரும்பிப் பார்க்கவைத்தது.

நான் ஒன்றாம் வகுப்பு சேர்ந்ததில் இருந்து, பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் வரை, ஒரு வீட்டில் இருந்தோம். ரோட்டின் மேலேயே வீடு. ரோடு என்றால் பெரியது இல்லை. அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு டவுன்பஸ் போகும், அப்புறம், சைக்கிள்களும், மாட்டு வாண்டியும் போகும் ரோடு. ஒரு சிறிய வாசல், இரண்டு பக்கமும் திண்ணைகள், ஒரு பெரிய அறை அப்புறம் சின்ன சமையலறையால் ஆனது எங்கள் வீடு. மற்ற வீடுகளைப் போலல்லாமல் கூரை, ஓட்டுக்கூரை, மிகவும் உயரமானது. கவிழ்த்துப்போட்ட முக்கோணம் போல. அதன் குத்துயரம் ௨0 அடிக்கு வரும். கூரையின் இரு பக்கங்களிலும் இரண்டு கண்ணாடி ஓடுகள் பதிக்கப்பட்டிருக்கும், வெளிச்சம் வர. என் அப்பா, நான், தம்பி, அம்மா என்று வரிசையாகப் படுத்துக்கொள்வோம் அந்த அறையில்( வரவேற்பறை, படிக்கும் அறை, சாப்பிடும், தூங்கும் அறை எல்லாமும் அதுதான்). மேலெ அழகான ஒரு ராலிஃபேன் சுற்றிக்கொண்டிருக்கும். போர்வையை கழுத்து வரை இறுக்கப் போர்த்திக்கொண்டு நிலாவுக்காக காத்திருப்பேன். இரவில், வானத்தைச் சுற்றி வட்டமடிக்கும் நிலா கண்ணாடி ஓட்டின் வழியாக எங்கள் வீட்டில், நான்கு சதுரங்களில் தன் வெளிச்சத்தை தவழவிட்டு இருக்கும். நேரம் ஆக வெளிச்சம் நகர்ந்து கொண்டே வரும். சரியாக என் முகத்துக்கு நேரே வெளிச்சம் வரும்போது.. ஆகா.. கண்ணாடி ஓட்டில் நிலா.. அதுவும் முழுநிலாக்காலங்களில்.. அப்படியே பார்த்துக்கொண்டு படுத்திருப்பேன். அது மெல்ல நகர்ந்து அப்பா, தம்பி, அம்மாக்கும் காட்சியளித்து விட்டு தன் உலாவைத் தொடரும். தெருவில் முழு அலங்காரத்துடன் உலாவரும் உற்சவமூர்த்தி நம் வீட்டுமுன்பும் சிறிது நின்று வீட்டுப்பெண்களுக்கு காட்சியளித்துவிட்டு தன் பயணத்தைத் தொடருவதுபோல.. இந்த நிலாவும்... என்று சொல்லத் தோன்றுகிறது.

1 comment:

Jayakumar said...

நானும் நிலாவை இரசிப்பேன். ஆனால் இவ்வளவு கவித்துவத்துடன் பார்த்ததில்லை. "நிலா பார்த்தல்" அருமையாக உள்ளது. தொடர்ந்து எழுதவும்.