Monday, June 30, 2008

நிலா பார்த்தல்...

பேருந்துப் பயணம். கல்லூரியில் படிக்கும் நாட்களில், விடுமுறைக்கு ஊருக்குப் போவது பலமுறை பேருந்தில். பெரும்பாலும் நீண்ட பயணங்கள் இரவிலேயே இருக்கும். எனக்கு பேருந்தை விட ரயில் பயணம் பிடிக்கும் என்றாலும்.. பேருந்துக்கு.. அதற்கே உரிய சாதகங்கள் பல. ஜன்னலைத் திறந்தால் விசுவிசுவென்று அடிக்கும் குளிர்காற்று, பேருந்துக்கே உரியது. சாலையில் சீராகப்போகும் பேருந்தின் சத்தம் ஒருவித ரொமாண்டிக்கான மனநிலையத் தரும். மனம் லேசாகி, தனக்குப் பிடித்தவர்களை நினைத்துக் கொள்ளும். ரயிலில் போனால், வீட்டுக்குள் இருப்பது போன்றே ஓர் உணர்வைத் தரும். ஆனால், பேருந்து அப்படியல்ல. நமக்கு முன்னே போகும் சாலையும், ஓட்டுனர் இன்னொரு பஸ்ஸை முந்த ஒடித்து ஓட்டும் லாவகமும், உட்கார்ந்து இருக்கும் நாற்காலியின் அதிர்வும் ...பேருந்து.. பயணம்.

பஸ்சில் போகும்போது இருகைகளாலும் காதைப் பொத்திக்கொண்டு, கைகளைத் திறந்து திறந்து மூடினால், “வாவ்வாவ்வாவ்” என்று சத்தம் கேட்கும். அது எனக்கு, “ அவ்வா அவ்வா அவ்வா” என்று கேட்கும். தெலுங்கில் அவ்வா என்றால் பாட்டி. எனக்கு என் பாட்டியை மிகவும் பிடிக்கும் என்பதால், சிறுவயதில் பேருந்தில் போகும்போதெல்லாம் அப்படி செய்துகொண்டே போவேன். இப்போதும்.

பேருந்தின் ஓட்டத்தில், வாழ்க்கையும் ஓடுவதாகத் தோன்றும். ஓடும் பேருந்தின் ஜன்னலில் நிலா... ஓடாமல் நிற்கும். முகத்தில் அடிக்கும் காற்றும், நிலாவும் சேர்ந்து எவ்வளவோ கற்பனைகளைத் தோற்றுவிக்கும். எனக்கான காதலி ஒருத்தி வந்து அமர்வாள், மிகவும் அருகில். பாரதிதாசனின், “ நீ எனக்கு அமிழ்து, நானுனக்கு எப்படியோ” என்று சொல்லிக்கொண்டிருப்பேன் அவளிடம். “ போடா, உனக்கு வேறு வேலை இல்லை” என்பாள் என் காதலி. காற்றில் அவளின் தலைமுடி என்மேல் பறந்து கொண்டிருக்கும். பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும் தென்னை மரங்களின் கீற்றுகள் மறைத்தாலும், அவ்வப்போது வந்து எட்டிப்பார்த்து சிரிக்கும்... நிலா.

2 comments:

Jayakumar said...

செழியன், பேருந்தும்-நிலாவும் சுவையான கலவை. சமீபத்தில் பயணித்த பொழுதுகூட நிலாவும் கூடவந்தது. உனது கட்டுரைத் தொடர் நன்றாக வருகிறது.

Jayakumar said...

"ரொமாண்டிக், ஜன்னல்" போன்ற சொற்களுக்கு தமிழ் பதங்கள் பயன் படுத்தியிருன்ந்தால் படிப்பதற்கு இன்னும் சுவையாக இருக்கும் என்று தோன்றியது.